வாணியம்பாடி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
வாணியம்பாடி அருகே 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஆம்பூர் அருகே பெரியவரிகம் பகுதியில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் சின்னவரிக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்கின்ற யுவராஜ் என்ற வாலிபர் அந்த சிறுமியை கடந்த 1 ஆண்டாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி வேலைக்கு சென்ற சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
காணாமல் போன சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் தன் மகள் காணாமல் போனதாக கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்ற போலீசார் செல்போன் நெட்வொர்க்கை பயன்படுத்தி அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.