வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற தலைவரான இளம் பட்டதாரி பெண்
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற தலைவராக இளம் பட்டதாரி பெண்தேர்வு செய்யப்பட்டுள்ளார்;
கொல்ல குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா(வயது 21). இவர் பி.சி.ஏ பட்டதாரி ஆவார். இவருக்கும் ஆலங்காயம் ஒன்றியம் கொல்லகுப்பம் ஊராட்சி புதூர் பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவருடன் கடந்த 11 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதன் காரணமாக பிரினிதா ஶ்ரீ என்ற ஒரு மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பெண் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனால் பட்டதாரி பெண்ணான அர்ச்சனா தேர்தலில் போட்டியிட்டார்.
ஆலங்காயம் ஒன்றியம் கொல்ல குப்பம் ஊராட்சியில் மொத்தம் 1664 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அர்ச்சனா உட்பட 4 பேர் போட்டியிட்டனர். இதில் அர்ச்சனா 694 வாக்குகளை பெற்று ஊராட்சி மன்ற தலைவரானார்.
தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றும், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்க முழு வீச்சில் செயல்படப்போவதாக கூறினார்.
மேலும் இவரது மாமனார் அதிமுக சார்பில் கடந்த ஆட்சியில் கொல்ல குப்பம் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்து உள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பெண்ணுக்கு ஒதுக்கியதால் இதில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.