வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஐஏஎஸ் அதிகாரி திடீர் ஆய்வு
மழை நீரால் பாதிக்கப்பட்ட வாணியம்பாடி அரசு மருத்துவமனையில், ஐஏஎஸ் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால், நீர் நிலைகள் நிரம்பி அதனுடைய உபரி நீரானது வெளியேறி வருகிறது. வாணியம்பாடி அருகே இருக்கும் கோவிந்தாபுரம் ஏரி நிரம்பி, உபரி நீரானது நகரப்பகுதி முழுவதும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையின் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து, ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். மழை நின்றும்கூட, தற்போதுவரை தண்ணீர் அதிகளவில் சூழ்ந்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு நோயாளிகளின் நிலைமை கேள்விக்குறியாக இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தென்காசி. எஸ்.ஜவஹர், மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனைக்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது, அதனை அப்புறப்படுத்துவது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது என்று, நகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். கால்வாய்களை தூர்வாரி, அதன் மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் முழுமையாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு மற்றும் பலர் உடன் இருந்தனர்.