வாணியம்பாடி அருகே கனமழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
வாணியம்பாடி அருகே நள்ளிரவில் பெய்த கனமழையில் சாலையோர மரம் வாகனம் மீது விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு;
கனமழை காரணமாக சாய்ந்த மரம் வாகனத்தின் மீது விழுந்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆலங்காயம், நிம்மியம்பட்டு, வெள்ளக்குட்டை, உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு தொடங்கி விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால் ஆலங்காயத்திலிந்து காவலூர் செல்லும் சாலையில் சாலையோரம் உள்ள சுமார் 50 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்தது.
அப்போது, காவலூரிலிருந்து ஆலங்காயம் நோக்கி வந்த மினி லாரி மீது அந்த மரம் விழுந்ததில் வாகனம் சேதமடைந்தது. மேலும் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததால், ஆலங்காயத்தில் இருந்து காவலூர் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து ஆலங்காயம் காவல்துறை மற்றும் வனத்துறையினர், மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மின் ஊழியர்கள் மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.