வாணியம்பாடி அருகே மழையின் காரணமாக மலைச்சாலை துண்டிப்பு
வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதிக்கு செல்லக்கூடிய மலைச்சாலையில் மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.;
தமிழக ஆந்திரா எல்லை மற்றும் ஆந்திரா வனப்பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்ததால் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து வீரணமலை மற்றும் வெலதிகாமணிபெண்டா செல்லும் மலை சாலையில் உள்ள பொன்னியம்மன் கோயில் மீது செல்லும் மலைசாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பெரிய கற்களும் விழுந்துள்ளதால் அவ்வழியாக பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆட்டோக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..
வழக்கமாக அந்த மலை சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என 5 பேருந்துகள் சென்று வந்த நிலையில் இந்த மண் சரிவு காரணமாக மலை பகுதிக்கு கீழே அண்ணா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டது. தற்போது இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வு மேற்கொண்டு விரைவாக சாலையை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதின் பேரில் மாநில நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் புருஷோத்தமன் மற்றும் வட்டாட்சியர் மோகன் ஆகியோர் தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் சாலை சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வாணியம்பாடியில் இருந்து மணல் மூட்டைகளை கொண்டு வந்து நிரப்பும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சாலையை சேதம் அதிகமாக ஏற்பட்டுள்ளதால் இன்று தற்காலிகமாக மட்டுமே சாலையை சரி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் வாணியம்பாடியில் வீரன் மலைப்பகுதிக்கு செல்லக்கூடிய மலைப்பாதை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு உள்ளனர்