காவல்துறைக்கு லஞ்சம் கொடுப்பதாக கூறும் அரிசி கடத்தல்காரர்: வைரலாகும் ஆடியோ
வாணியம்பாடியில் பிடிபட்ட கடத்தல்காரர் லஞ்சம் கொடுப்பதாக காவலரிடம் பேசிய ஆடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது;
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி கடத்தல் வேன்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடெல்லி பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை அமைத்து ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை பிடிக்க உத்தரவு பிறப்பித்தார்..
அதைதொடர்ந்து தனிப்படை உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு வாணியம்பாடி நியூடெல்லி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தபோது லாரியிலிருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளர் தப்பி ஓடிவிட்டனர் அதில் 5 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது அவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் தொடர்ந்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு வந்த அவர்கள் மற்றொரு மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அப்போது மினி லாரியில் இருந்த நியூடெல்லி பகுதியை சேர்ந்த 5 பேரை கைது செய்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்
இதைதொடர்ந்து மினி லாரி உரிமையாளர் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வேலு என்பவர் வேலூர் மாவட்டம் உணவு தடுப்பு பிரிவு தலைமை காவலர் சதீஸ் என்பவரிடம் பேசிய ஆடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு 1 லோடு கடத்தி விட்டு சென்று விட்டேன் என்று பகிரங்கமாக காவலரிடம் சொல்கிறார். பிடிபட்ட 2 மணி நேரத்தில் மேலும் வாகனம் பிடித்து விட்டார்கள் என்ன செய்வது சார் என்று காவலரிடமே ஐடியா கேட்கிறார் அரிசி கடத்தல்காரர்.
இந்த ஆடியோ தற்போது வாட்ஸ் அப் குழுக்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது