வாணியம்பாடி அருகே வீடுகளுக்குள் தண்ணீர்: சாலை மறியல் போராட்டம்.
வாணியம்பாடி அருகே வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததால், அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ஊராட்சி சி.எல் காலனி குடியிருப்பு பகுதியில் சுமார் 25 வீடுகள் உள்ளன. தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வளையாம்பட்டு கச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த வருவாய் கோட்டாச்சியர் காயத்ரி சுப்பிரமணி வாணியம்பாடி வட்டாச்சியர் மோகன் ஆகிய வருவாய் துறையினர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனி தண்ணீர் சூழாத வண்ணம் நிரந்தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.
மேலும் மழை நீர் அதிக அளவு சூழ்ந்து உள்ள வீடுகளில் உள்ளவர்களை தற்காலிகமாக முகாம்களில் தங்க வைப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.