வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசியை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார். ஓட்டுனர் தப்பியோட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த 102 ரெட்டியூர் பகுதியில் ஆலங்காயம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த மினி லாரியை நிறுத்த முயன்றபோது ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றதையடுத்து காவல்துறையினர் மினி லாரியை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர்.
அப்போது லாரியை விட்டு ஓட்டுநர் தப்பி ஓட்டம் பிடித்தார். முதற்கட்ட விசாரணையில் குறவர் வட்டம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான வாகனம் என்பதும் திருப்பத்தூரிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி கொண்டு சென்றதும் தெரியவந்தது.
2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்