வாணியம்பாடியில் தனியார் செல்போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு
வாணியம்பாடியில் தனியார் செல்போன் டவர் அமைக்க பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷீராபாத் 4 வது தெருவில் வசித்து வருபவர் ஷபீக் அஹமத். அதே பகுதியில் இவருக்கு சொந்தமான காலியாக உள்ள இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்புறத்தில் கேட் அமைத்து அதனுள்ளே தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் மேற்கொண்டு வந்துள்ளார்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் செல்போன் டவர் அமைய இருக்கும் இடத்திற்கு முன்பாக எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் பிரச்சனை குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.