வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பள்ளியில் தங்கியுள்ள குடும்பங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை

வாணியம்பாடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 48 குடும்பங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை குற்றச்சாட்டு

Update: 2021-11-23 15:17 GMT

உதவிகள் கிடைக்காமல் முகாமில் தங்கியிருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் நிலையங்கள் நிரம்பி உள்ளன. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தாபுரம் ஏரி நிரம்பி அதனுடைய உபரி நீர் நியூடவுன் ஜார்ஜ்பேட்டை, திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் புகுந்தது இடுப்பளவு தண்ணீர் வீடுகளில் தேங்கி நின்றது.

இதில் ஜார்ஜ் பேட்டையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள சுமார் 60 வீடுகளில் உள்ள குடும்பத்தினர்களை பகுதி மக்களை மீட்டு நியூடவுன் பகுதியில் உள்ள நகராட்சி முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்கள் நடுநிலையப்பள்ளி வளாகத்தில் தங்க வைத்தனர். மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான அத்தியவாசி பொருட்களை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

கடந்த 5 நாட்கள் ஆகியும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை அரசு அதிகாரிகள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என யாரும் வந்து பார்க்கவில்லை என்று குற்றச்சாட்டு  வைத்துள்ளனர்.

மேலும் பள்ளிகள் தொடங்கி உள்ள நிலையில் ஓரிரு நாட்களில் முகாமை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உள்ளது. அப்படி வெளியேற்றப்பட்டால் எங்கே போவது என தெரியவில்லை திகைத்துப் போய் நிற்கின்றனர்.

மேலும் வெள்ளம்  சூழ்ந்துள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் நிரந்தரமாக இருக்க மாற்று இடத்தை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News