வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ செந்தில்குமார் திடீர் ஆய்வு மேற்காெண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்தநிலையில் இந்த மருத்துவமனையில் இருந்து பிரசவத்திற்காக வரும் பெண்களை உடனடியாக மேல் சிகிச்சைக்கு என்று கூறி திருப்பத்தூர் அல்லது வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.
இதனால் பிரசவத்திற்காக வரும் பெண்கள் மிகவும் அவதிப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன, இதனையடுத்து வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில் குமார் நேற்று காலை திடீரென அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு இருந்த மருத்துவ அதிகாரி டாக்டர். சிவசுப்பிரமணியன் இடம் இதுகுறித்து விளக்கங்களை கேட்டு அறிந்தார். அப்போது மருத்துவமனையில் பணியாற்றும் பல டாக்டர்கள் வெளியூர்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு தற்காலிக பணிக்காக (டெப்டேஷன்) என்ற பெயரில் அனுப்பப்பட்டு விடுகின்றனர். இதனால் இங்கு முறையாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து அங்கு பேசிய எம்எல்ஏ செந்தில்குமார், அரசு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தரப்படும் எனவும், ரூபாய். 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் மருத்துவ மனை கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கப்படும் என்றும், இதன்மூலம் பிரசவ வார்டு பகுதி மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு பகுதிக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொள்ளலாம் எனவும் அவரிடம் கூறினார். மேலும் மருத்துவமனைக்கு வரும் பெண்கள் நோயாளிகள், பிரசவத்திற்காக வரும் பெண்களும் இங்கேயே இருந்து சிகிச்சை பெற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள கட்டிடங்களில் மழை நீர் ஒழுகுவது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்தப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார், மேலும் பிணவரை கட்டிடம் உள்ள பகுதியில் தொடர்ந்து ஒரு மாதம் ஆகியும் மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அவற்றை அப்புறப்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளிடம் கூறினார். சட்டமன்ற உறுப்பினர் ஆய்வின்போது நகர கூட்டுறவு வங்கி இயக்குனரும், நகர செயலாளருமான சதாசிவம், பொருளாளர் தன்ராஜ் முன்னாள் கவுன்சிலர்கள் குமார், பாரதிதாசன், கோவிந்தசாமி, சிவானந்தம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.