வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் தீ விபத்து
வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் தீ விபத்து. ஊரடங்கை மீறி செயல்பட்டதால் வருவாய்த்துறையினர் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் அப்துல் ரசாக் என்பவருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை உள்ளது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இத்தொழிற்சாலையில் திடீரென ஆட்டோ ஸ்பிரே பாய்லரில் தீப்பற்றி எரிந்து மளமளவென மேற்கூரை வரை தீ பரவியது. உடனடியாக தொழிலாளர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். தீயை அணைக்க முடியாததால், வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
பின்னர் அங்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்ததில், தொழிற்சாலையில் தீயணைப்பான் கருவி போன்ற உபகரணங்களை சரியாக பயன்படுத்தாததாலும், ஊரடங்கு உத்தரவை மீறி தொழிற்சாலை செயல்பட்டு வந்ததாலும் வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் தலைமையில் வருவாய்த்துறையினர் தொழிற்சாலைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்