ஆந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பியது
தமிழக ஆந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி, தண்ணீர் தமிழக பாலாற்றில் வெளியேறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடர் மழையால் பேத்தமங்கலம் மற்றும் ராமசாகர் தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் வெளி ஏற்றப்பட்டு வருகின்றது.
இந்த வெள்ளம் காரணமாக தமிழக ஆந்திர எல்லை பகுதியான புல்லூர் பகுதியில் ஆந்திரா அரசு கட்டி உள்ள தடுப்பணை நிரம்பி தமிழக பாலாற்றில் வெளியேறி ஆவாரங்குப்பம், அம்பலூர் கொடையாஞ்சி வழியாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பேத்தமங்கலம் எரி நிரம்பி உள்ளதால் அதன் உபரி நீர் பாலாற்றில் திறந்து விடுவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் பாலாற்றங்கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனால் புல்லூர், ஆவாரங்குப்பம், அம்பலூர் ,ராமநாயக்கன் பேட்டை, கொடையாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.