தமிழக- ஆந்திர எல்லை நீர் வீழ்ச்சிகளில் குளிக்க தடை ; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
ஆந்திர வனப்பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சிகள் மற்றும் தடுப்பணைகளில் குளிக்க ஆந்திர அரசு தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆந்திர வனப்பகுதியை ஒட்டியுள்ள வீரணமலை, ரமகுப்பம், தேவராஜபுரம் வெங்கட்டராஜபுரம் ஆகிய பகுதிகளிலும், தமிழக பகுதிகளான அலசந்தாபுரம், நாராயணபுரம், திம்மாம்பேட்டை, புல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
மேலும் ஆந்திர பகுதியிலுள்ள திம்மகொடா நீர்வீழ்ச்சி மற்றும் பொம்மகொடா நீர்வீழ்ச்சிகளிலும் பாலாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளிலும் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இரு சக்கர வாகனத்தில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக நீர்வீழ்ச்சிக்கு வந்து செல்கின்றனர்.
சுற்றுலாப்பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து விட்டு செல்வதால் ஆந்திர அரசு வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளது. இதனால் இன்று சுற்றுலா தளமான நீர்வீழ்ச்சிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்த வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். இதனால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.