பரபரப்புடன் முடிந்த ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் தேர்தல்

ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில் திமுகவினர் ஆறு பேர் வாக்களிக்காத நிலையிலும் அதிமுக, பாமக ஆதரவுடன் திமுக வேட்பாளர் வெற்றி.

Update: 2021-10-23 10:47 GMT

ஆலங்காயம் ஒன்றிய தலைவர் சங்கீதா பாரி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட 11 பேரும், அதிமுக சார்பில்  4 பேரும், பாமக சார்பில் 2 பேரும், சுயேச்சை ஒருவர் என 18 பேர் ஒன்றிய குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்ந்தெடுக்க 18 ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. அப்போது திமுகவை சேர்ந்த 6 உறுப்பினர்கள் வாக்களிக்காமல் வெளியில் வந்து விட்டனர். இருப்பினும் திமுக 5 வேட்பாளர் உடன் 4 அதிமுக, 2 பாமக மற்றும் 1 சுயேச்சை வேட்பாளர்கள் திமுகவுக்கு வாக்களித்ததால் திமுகவை சேர்ந்த சங்கீதா பாரி 12 வாக்கு பெற்று வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த திமுக ஒன்றிய குழு உறுப்பிர்கள் 6 பேர் மற்றும் திமுகவினர் ஆலங்காயம் வாணியம்பாடி சாலையில் அமர்ந்து மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திமுகவுக்கு துரோகம் செய்து அதிமுக உடன் கை கோர்த்து கொண்டவர்கள் ஒழிக, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஒழிக, திமுக ஒன்றிய செயலாளர்கள் முனிவேல், ஞானவேலன் ஒழிக என்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்

தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு திடீரென தீ குளிக்க முயற்சியில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பில் இருந்த போலீஸார் அவரை மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தொடர்ந்து பிற்பகல் ஒன்றிய குழு துணைத்தலைவர்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியின்றி திமுகவை சேர்ந்த பூபாலன் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து வெற்றிபெற்ற ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் 10 பேரை பாதுகாப்பு கருதி போலீஸ் பாதுகாப்புடன் காரில் அழைத்து சென்று அவரவர் வீடுகளில் விட்டனர்.

Tags:    

Similar News