வாணியம்பாடி ரயிலில் கடத்த பதுக்கிய சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி ரயிலில் வெளி மாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நகர காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் மூலம் உடமைகளை போல் ரேஷன் அரிசி மூட்டைகள் கொண்டு சென்று ரயில் நிலையம் அருகே உள்ள புதர்களில் பதுக்கி வைத்து கொண்டிருந்ததைக் கண்டு போலீஸார் அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது காவல்துறையினர் வருவதை கண்ட கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தியதில் சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி இருப்பதை கண்டு பிடித்து உடனடியாக வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை வருவாய்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
வாணியம்பாடியில் இருந்து தொடர்ந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவது தொடர் கதையாகியுள்ளது.