சிறுத்தை நடமாட்டம்-  பொதுமக்கள் அச்சம்!

Update: 2021-02-24 04:15 GMT

வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சென்னம்பேட்டை பகுதியில் பங்களா தோப்பு பாலாற்றுப் படுகையில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.அங்கு மல்லிகா மற்றும் சம்பூர்ணம் என்ற இரு பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாய்களை துரத்தி கொண்டு திடீரென அதிக சத்தத்துடன் சிறுத்தை ஒன்று அவ்வழியாக கடந்து சென்றதை பார்த்த இரு பெண்களும் கூச்சலிட்டு உடனே அருகில் இருந்தவர்களை அழைத்தனர்.

தொடர்ந்து பாலாற்று படுகை ஓரம் உள்ள புதருக்குள் சிறுத்தை சென்று விட்டது. உடனடியாக இது குறித்து பொதுமக்கள் ஆலங்காயம் வனத்துறை மற்றும் வாணியம்பாடி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு கால்தடத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த தகவல் தீ போல பரவியதால் சுற்று வட்டார கிராமங்களில் காவல்துறை சார்பில் கொடையாஞ்சி ஊராட்சியில் தண்டோரா மூலம், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. சம்பவ இடத்தில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், திருப்பத்தூர் வனசரக அலுவலர் பிரபு உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

Tags:    

Similar News