கந்திலி அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதல்; இளைஞர் உயிரிழப்பு
திருப்பத்தூர் அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.;
விபத்தில் பலியான கார்த்திக்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சி மைக்கா மேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் மகன் கார்த்திக் (வயது 20). இவர் இன்று தனது உறவுக்கார பெண்ணுடன் திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கந்திலி அடுத்த புங்கனூர் கூட்டுரோடு பகுதியில் தனக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் கார்த்திக் தூக்கி வீசப்பட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, படுகாயம் அடைந்த சத்தியவாணியை அவ்வழியாக வந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.