கந்திலி அருகே கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருப்பத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்குப்பின் கலையரசியின் சடலத்தை மீட்டனர்
கந்திலி அருகே கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கும்மிடிக்காம்பட்டி ஊராட்சி அனிகானூர் பகுதியில் வசிப்பவர் திருப்பதி ஆட்டோ டிரைவரான இவரது மகள் கலையரசி ( 18). அதே பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த இவர் தன்னுடைய தம்பி செல்வம் ( 12) மற்றும் சக நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். தன்னுடைய தம்பி உட்பட சக நண்பர்கள் கிணற்றுக்குள் குதித்து விளையாடும் போது தானும் நீச்சல் அடிக்க வேண்டும் என்கிற ஆர்வமிகுதியில் எண்ணெய் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்க ஆரம்பித்த கலையரசி நீச்சல் அடிப்பதற்கு தொந்தரவாக இருப்பதாக கருதி அந்தக் கேனை கழற்றி எறிந்து நீச்சல் அடித்தபோது நீரில் மூழ்கினாராம்.
நீருக்குள் மூழ்கிய கலையரசி மீண்டும் வெளியே வராததை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பி செல்வம் உள்ளிட்ட சக நண்பர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தனர். ஊர் பொதுமக்கள் தகவல் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறை அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் சுமார் 2 மணி நேரம் தேடுதலுக்குப்பின் கலையரசியின் சடலத்தை மீட்டனர்.சம்பவம் குறித்து கந்திலி காவல்துறை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்