திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ. 50.83 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலத் துறை சார்பில் ரூ. 50.83 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன;

Update: 2021-07-30 10:58 GMT

ஆட்சியர் கூடுதல் வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம், ஆட்சியர் கூடுதல் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில், மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில்  ரூ. 50,83,000 மதிப்பீட்டில் 915 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உள்ள 53 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் உள்ள 60 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தமிழக அரசின் மூலம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூரில் 300 நபர்களுக்கும், நாட்றம்பள்ளியில் 150 நபர்களுக்கும், வாணியம்பாடியில் 275 நபர்களுக்கும், ஆம்பூரில் 190 நபர்களுக்கும் மொத்தம் 915 நபர்களுக்கு ரூபாய் 50,83,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் கல்வி உதவித்தொகை, திருமணம் உதவித்தொகை, ஓய்வூதிய உதவி தொகை, இயற்கை மரணம் அடைந்ததற்கான உதவித்தொகை, என பயனாளிகளை தேர்ந்தெடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News