பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க திருப்பத்தூரில் போலீசார் கொடி அணிவகுப்பு
நகர்ப்புற தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க திருப்பத்தூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.;
நகர்ப்புற தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க திருப்பத்தூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் தீவிரமடைந்து உள்ளது.
திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் 162 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க, தி.மு.க., பா.ஜ.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதிமையம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இந்தக் கொடி அணிவகுப்பு திருப்பத்தூர் நகர பகுதி வீதிகளில் கோட்டை தெருவிலிருந்து அண்ணா நகர், கௌதம் பேட்டை, காந்திநகர், உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்துகொண்டு இந்த அணிவகுப்பு நடைபெற்றது.