திருப்பத்தூரில் முதியவரிடம் பணத்தை திருடிய மர்ம நபர்கள்
திருப்பத்தூரில் கடைகடையாக சென்று யாசகம் பெற்று முதியவர் சேமித்து வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்
திருப்பத்தூர் என்றால் சிவன் என்று பொருள். பத்து சிவன் திருத்தலங்களை கொண்ட ஊர்தான் திருப்பத்தூர். இப்படி பெருமைமிக்க இந்த திருப்பத்தூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் தனது குறையை கூறினார். இதைக் கேட்ட காவலர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.
80 வயது இருக்கும் முதியவர் ஒருவர் ஆதரவு இல்லாமல் கடை கடையாக சென்று யாசகம் பெற்று தனது வறுமையைப் போக்கி வாழ்ந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு இந்த முதியவரிடம் அவர் யாசகம் பெற்று சேமித்து வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் அவரிடமிருந்து திருடிச் சென்றுள்ளனர். இதனால் பதறிப்போன முதியவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் தெரிவிப்பதற்காக வந்தார். அப்பொழுது வெளியிலிருந்த நகர காவல் ஆய்வாளர் பேபி, முதியோரிடம் என்ன நடந்தது என்று கேட்க, அந்த முதியவர் தான் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக கூறினார்.
அதனை தொடர்ந்து பணம் திருடு போன இடத்திற்கு முதியவரை போகும்படியும் தான் அங்கு விசாரணைக்கு வருவதாகவும் காவல் ஆய்வாளர் கூறினார்
இது குறித்து தகவலறிந்த மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனி உடனடியாக இது குறித்து விசாரணை நடத்துமாறு நகர காவல் ஆய்வாளர் பேபிக்கு கூறினார். அந்த முதியவரிடம் நடந்த விவரங்கள் குறித்து கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். முதியவர் ஒருவர் கடை கடையாக சென்று யாசகம் செய்து தான் சேமித்து வைத்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..