திருப்பத்தூர் அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

திருப்பத்தூர் அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 15 பேர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்

Update: 2022-02-26 12:00 GMT

திருப்பத்தூர் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பேருந்தும், லாரியும்

திருப்பத்தூர் அடுத்த அரசு பட்டுப்பூச்சி அலுவலகம் அருகே ஓசூரில் இருந்து வந்த அரசு பேருந்தும் திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வைக்கோல் ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.

திருப்பத்தூர் தர்மபுரி மண்டலத்திற்கு உட்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுனர் குரும்பேரி பகுதியைச் சேர்ந்த  சரவணன் (50) மற்றும் தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (54) பேருந்தின் நடத்துனர் இருவரும் ஓசூரில் இருந்து சுமார் 80 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் வந்து கொண்டிருந்தனர். 

அரசு பட்டுப்பூச்சி  அலுவலகம் எதிரில் வந்த பொழுது முன்னே சென்று கொண்டிருந்த டிராவல்ஸ் வாகனம் திடீரென வேகத்தைக் குறைத்து நிற்பதற்கு முயன்றதாக தெரிகிறது. இதனால் பதட்டமடைந்த பேருந்தின் ஓட்டுநர் சரவணன் அந்த வாகனத்தின்  மோதி விடக்கூடாது என்பதற்காக பேருந்தை வலது பக்கமாக திரும்பி உள்ளார்.

அப்போது  எதிர்திசையில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் அரவிந்த்ராஜ் (24) லாரியில் பில் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரியை நோக்கி வந்து கொண்டிருந்ததை கவனிக்கவில்லை. 

இதனால், எதிர்பாராதவிதமாக பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. ஆனால் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த சுமார் 80க்கும் மேற்பட்ட பயணிகள், ஓட்டுநர், நடத்துனர்   மற்றும் லாரியின் ஓட்டுனர் அனைவரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் சேதம் ஏதும் இன்றி தப்பினர்.

சிறு சிறு காயமடைந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகளை 108 ஆம்புலன்ஸில் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல் துறை விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News