திருநங்கைகள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைக் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் திருநங்கைகள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் திருநங்கைகளுக்கான ஆலோசனை கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் சுரேஷ் பாண்டியன், சரவணன், வட்டாட்சியர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவிகள் சரோஜினி, அவந்திக்கா, அன்பு, கோமதி தலையில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
திருநங்கைகள் தரப்பில் பேசுகையில், நாங்கள் அனைவரையும் போல பிறந்து வளர்ந்து பின்னர், திருநங்கைகளாக வளரும்போது எங்கள் பெற்றோர்கள் எங்களை வீட்டைவிட்டே விரட்டியடிக்கின்றனர்.எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு வயது வரம்பின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும்.கால்நடைகள் வளர்ப்புக்கு கடன் உதவி, உழவர் சந்தையில் ஒரு கடை திருநங்கைகளுக்கு என ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
எஸ்பி பாலகிருஷ்ணன் பேசும்போது, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கூட பெற்றோர்கள் வளர்க்கின்றனர்.ஆனால் திருநங்கைகளை வேறுபட்ட இனம் என நினைத்து ஒதுக்குகின்றனர்.வரும் காலங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கும் சமமான உரிமையளிக்க கூடிய காலம் விரைவில் வரும்.
சமூகத்தில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை கண்டு சோர்ந்து விடாமல் நம்பிக்கையோடு போராடி வாழ்வில் வெற்றி பெற வேண்டும். மேலும் படித்த திருநங்கைகள் காவல் துறையில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு படிப்பதற்கான புத்தகங்களை இலவசமாக வழங்கப்படும். உங்கள் கோரிக்கையினை மனுவாக அளித்தால் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் ஹேமாவதி, சாந்தி, ஜெயலட்சுமி, யுவராணி, உதவி காவல் ஆய்வாளர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.