கோயிலுக்கு சேர்த்த பணத்தை கொரோனா நிவாரணநிதிக்கு வழங்கிய திருப்பத்தூர் தம்பதியினர்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சேர்த்த உண்டியல் பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய தம்பதியினர்
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரக்கூடிய நிலையில், தமிழக முதல்வர் தங்களால் முடிந்த கொரோனா நிவாரண நிதியை வழங்கலாம் என அறிவித்திருந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மட்றப்பள்ளி பகுதியை சார்ந்த ஞானசேகரன் (60) மற்றும் அவரது மனைவி சசிரேகா (55) ஆகிய இருவரும் அதே பகுதியில் சிறிய பெட்டி கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று வருட காலமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கைக்கு சேர்த்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் 10 ஆயிரத்து 420 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியர் சிவனருள் அவர்களிடம் நேரில் சந்தித்து தம்பதிகள் வழங்கினர்.
இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவனருள் தங்களின் பணம் நேரடியாக இறைவனின் தொண்டு காரியத்திற்காக செலவிடப்படும் என்றும் மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
இந்த உண்டியலை பெற்றுக்கொண்ட அலுவலக ஊழியர்கள் அப்பணத்தை தாங்கள் அணிந்திருந்த காலணிகளை கழட்டி விட்டு எண்ணி, 10 ஆயிரத்து 420 ரூபாய் இருப்பதாக தெரிவித்தனர். அதன்பின் இப்பணத்தை மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்தார்.
திருப்பத்தூரில் திருப்பதி கோயிலுக்காக சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை நான் நிவாரண நிதிக்கு வழங்கிய தம்பதியினருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.