கணவனை தவிக்கவிட்டு இளம்பெண் தோழியுடன் எஸ்கேப்; மேற்குவங்கத்தில் போலீசார் மீட்பு
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கணவரை தவிக்க விட்டு தோழியுடன் வட மாநிலத்திற்கு மாயமான இளம் பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர்.;
மேற்குவங்க மாநிலத்திலிருந்து மீட்கப்பட்ட இளம்பெண்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கணவரை தவிக்க விட்டு தோழியுடன் வட மாநிலத்திற்கு மாயமான இளம் பெண் மீட்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி கிராமம் நடுவூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் ( வயது 23) இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான காரை வைத்து டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு ஆம்பூர் பகுதியை சேர்ந்த உறவினரின் மகளான ஷோபா ( வயது 20) என்பவருடன் கடந்த மே மாதம் 23ம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு முன், திருப்பூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஷாேபா பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ ராவும் இவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், ஜெயஸ்ரீ ராவ் திருமணமான தோழி ஷோபாவை பார்க்க ஆம்பூருக்கு வந்தார். அவர் ஆம்பூரில் உள்ள ஷோபாவின் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருந்தார்.
பின்னர், ஜெயஸ்ரீ ராவ் தனது சொந்த ஊருக்கு புறப்பட தயாரானார். இதனால் ஷோபா மற்றும் இவரது கணவர் காமராஜ் ஆகியோர் சேர்ந்து அவரை ரயில் மூலம் வழியனுப்ப கடந்த மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது, ஜோலார்பேட்டை வழியாக கல்கத்தா நோக்கி செல்லும் ரயிலில் வட மாநில தோழி ஜெயஸ்ரீராவ்வை ரயிலில் ஏற்றி இருக்கையில் அமரவைத்தனர். ரயில் புறப்படும் நேரத்தில் ஜெயஸ்ரீ ராவுக்கு தண்ணீர் பாட்டில் வாங்க சொல்லி தன்னுடைய கணவரிடம் ஷோபா கூறியுள்ளார்.
தண்ணீர் பாட்டில் வாங்க சென்ற காமராஜ், ரயில் புறப்பட்டதையடுத்து ஓடி வந்து தனது மனைவி பார்த்த போது காணவில்லை. ரயில் நிலையம் முழுவதும் தேடிப்பார்த்தும் ஷோபா கிடைக்கவில்லை. இதனால் வட மாநில தோழி ஜெய்ஸ்ரீ ராவ் என்பவருக்கு செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் என்பவரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து காணமல் சென்ற ஷோபாவை தேடி வந்தனர்.
மேலும், ரயில்வே இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் வடமாநில தோழியின் வீட்டு விலாசத்தை திருப்பூர் தனியார் பனியன் நிறுவனத்தில் வாங்கிக்கொண்டு ஷோபாவை கண்டுபிடிக்க ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர், மேற்குவங்க மாநிலத்திற்கு விரைந்து சென்ற தனிப்படையினர், நேற்று ஷோபாவை மீட்டு ஜோலார்பேட்டைஅழைத்து வந்தனர்.
இது குறித்து ஷோபாவிடம் நடடத்திய விசாரணையில், தனக்கு திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை.இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்வதாக தனது தோழியுடன் தெரிவித்துள்ளார்.
இதனால் வேறு வழியில்லாமல் தோழியுடன் சென்றதாக கூறினார். இதனால் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இளம் பெண்ணை மீட்டு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அரசு அதிகாரிகள் இளம் பெண்ணுக்கு அறிவுரை கூறியதால், இளம் பெண் கணவர் வீட்டிற்கு செல்வதாக கூறியதையடுத்து, அவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
திருமணமான 3 மாதத்தில் தோழியுடன் திருமணம் பிடிக்காமல் தப்பித்துச் சென்ற இளம்பெண்ணை ரயில்வே படையினர் மீட்டு கணவருடன் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.