திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.6.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் சோதனை சாவடி பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முட்டை வியாபாரி தங்கராசு என்பவர் லாரியில் முட்டைகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி வந்துள்ளார். அப்போது லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி 3 லட்சத்து 78 ஆயிரத்து 400 ரூபாய் எடுத்துச்செல்லப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்து நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அதே போல் நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஆறுமுகம் என்பவர் தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க தனது காரில் பணம் எடுத்து வந்துள்ளார். அப்போது அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 3 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தது தெரியவந்தது. அதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமியிடம் ஒப்படைத்தனர்.ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மூன்று இடங்களில் 6 லட்சத்து 59 ஆயிரத்து 400 ரூபாய் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் பறிமுதல் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.