நாட்றம்பள்ளி: குடிநீர் கேட்டு அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்
நாட்றம்பள்ளி அருகே மூன்று மாதங்களாக குடிநீர் சரிவர வராததால் அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த மூன்று மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி திடீரென காலிக்குடங்களுடன் பச்சூர்- திருப்பத்தூர் செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மகாலட்சுமி பொதுமக்களிடம் முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார் பின்னர் ஊராட்சி செயளாலர் அருளிடம் பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். இருப்பினும் சமாதானம் ஆகாத பொதுமக்கள் ஊராட்சி செயலர் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கிவருகிறார். தண்ணீர் இருந்தும் முறையான பைப் லைன் அமைத்து தராமல் காலம் தாழ்த்தி வருகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை ஊராட்சி செயலர் மீது வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து திம்மாம்பேட்டை காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊராட்சி செயலரிடம் இன்னும் ஓரிரு நாட்களில் பொதுமக்களுக்கு தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனடிப்படையில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்...