துரைமுருகன் கெஸ்ட் ஹவுஸில் கொள்ளை முயற்சி
ஏலகிரிமலையில் உள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கெஸ்ட் ஹவுஸில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் சுற்றுலா தளத்தில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. நேற்று மர்மநபர்கள் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும் எந்தக் காலத்திலும் ஒரே மாதிரியான சீதோசன நிலை நிலவி வருவதால் பல்வேறு இடங்களைச் சேர்ந்த விஐபிகள் ஏலகிரி மலையில் நிலமாகவும் கெஸ்ட் ஹவுஸ் ஆகவும் இடங்களை வாங்கி உள்ளனர். கோடைகாலங்களில் இது போன்ற இடங்களில் வந்து இளைப்பாறி செல்கின்றனர்.
இந்நிலையில் ஏலகிரி மலையில் உள்ள மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் 25 ஏக்கர் நிலப்பரப்பின் மத்தியில் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. இதில் துரைமுருகன் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். இதனை திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடுத்த புனி காந்தூர் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் பிரேம் குமார் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் இந்த கெஸ்ட் ஹவுசை பராமரித்து வருகின்றனர். மேலும் இவர்கள் தங்க கெஸ்ட் ஹவுஸ் கேட்டிலிருந்து ஒரு பகுதியில் தனி அறை கட்டப்பட்டு உள்ளது. அந்த கட்டிடத்தில் பிரேம்குமார் குடும்பத்தார் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கெஸ்ட் ஹவுஸின் திறந்தவெளி பகுதியில் உள்ள இடங்களில் பிரேம்குமார் என்பவர் இரவில் தூங்கிய பிறகு உள்ளே நுழைந்து கெஸ்ட் ஹவுஸில் பெரிய கதவை உடைத்து உள்ளனர்.
பின்பு உள்ளே சென்று பார்த்தபோது பணம் நகைகள் ஏதும் கிடைக்காததால் வீட்டிலிருந்த பொருட்களான கட்டில் பீரோ சேர் ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் தங்கள் உள்ளே நுழைந்ததை சிசிடிவி கேமரா பதிவில் பதிவாகியிருக்கும் எனக்கருதி சிசிடிவி கேமராவில் ஆர்டிஸ்ட் திருடிச் சென்றுள்ளனர். பின்னர் இன்று அதிகாலை கண்விழித்து கெஸ்ட் ஹவுசை கிளீன் செய்ய வந்த பிரேம்குமார் மற்றும் அவரது மனைவி கெஸ்ட் ஹவுஸில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து கெஸ்ட் ஹவுஸில் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தும் பின்னர் ஏலகிரி மலையில் உள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் ஏலகிரி மலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.