ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் ஆம்புலன்ஸ் ஊழியரின் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் . ஆம்புலன்ஸ் வாகனம் தாமதமாக வந்ததால் 108 ஊழியரின் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்

Update: 2022-01-25 11:58 GMT

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உயிரிழந்த ஏகாம்பரம் 

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜெய்பீம் நகரை சேர்ந்த பர்வீன் என்பவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கும் பணி செய்து வருகிறார். அவரது தந்தை ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஏகாம்பரம் (62). சத்துணவு அமைப்பாளராக பணிபுரியும் அவரது மனைவி தேன்மொழியை (55) ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பள்ளியில் விடுவதற்காக அவரது இருசக்கர வாகனத்தில் ஜோலார்பேட்டை நோக்கி சென்றுள்ளார்.

அப்போது திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பேருந்து இவர்கள் மீது பலமாக மோதி உள்ளது. இதனால் கணவன் மனைவி இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளனர். அடிபட்டு நீண்ட நேரமாகியும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகன பற்றாக்குறையால் வரவில்லை என்று கூறப்படுகிறது.

நீண்ட நேரத்திற்கு பிறகு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து இருவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஏகாம்பரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த தேன்மொழி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணி புரியும் மகன் எத்தனை உயிரை காப்பாற்றி இருப்பான் ஆனால் அவனது தந்தையை காப்பாற்ற முடியவில்லையா என்று அங்கு திரண்ட உறவினர் புலம்பி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News