மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது
திசையன்விளையில் உள்ள பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை. போக்சோ வழக்கில் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் கைது.
நெல்லைமாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெரும் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, போக்சோ வழக்கில் ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் கைது செய்யபட்டார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பள்ளி மாணவிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியரை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தூயயோவான் சாமாரியா மேல்நிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியான இதில் திசையன்விளை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் ஸ்பெஷல் வகுப்பு எடுப்பதாக பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் கூறியுள்ளார். இதையடுத்து அந்த வகுப்பில் சில மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் ஒரு மாணவியிடம் தலைமை ஆசிரியர் நெருக்கமாக பழக முயற்சி செய்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மற்ற மாணவிகளிடம் இதுகுறித்து கூறியுள்ளார். அவர்களும் தங்களிடம் தலைமையாசிரியர் பழக முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே பள்ளியில் பயிலும் தாய்- தந்தையை இழந்த மாணவி ஒருவரது செல்போனுக்கு அடிக்கடி ஆபாசமாக சாட் செய்துள்ளார்.
இதனால் பயந்து போன மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தகவலை தெரிவித்துள்ளனர். நிர்வாகம் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் திசையன்விளை காவல் நிலையத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த தலைமை ஆசிரியர் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கபட்டது.
கடந்த ஒரு வாரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் இன்று நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் பதுங்கி இருந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபகுமாரை சுற்றி வளைத்து பிடித்தனர். தலைமை ஆசிரியருக்கு திருமணம் ஆகி மனைவியும், 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.