மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
திருச்சி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகlள் தானமாக வழங்கப்பட்டதையடுத்து ஓட்டுநரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது
மணப்பாறை அடுத்த நல்லாம்பிள்ளை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிவாடி கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். இவர் சொந்தமாக சரக்கு வாகனம் ஒன்றை வைத்துக் கொண்டு தானே ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் ஏப்.28ஆம் தேதி மாலை நெல் மூட்டை ஏற்றிக் கொண்டு அமையபுரம் என்ற ஊரில் இறக்கி விட்டு, பின்னர் அங்கேயே வாகனத்தை நிறுத்திவிட்டு அவரது நண்பர் போஸ் என்பவரை பார்ப்பதற்காக நாகம்பட்டி கிராமத்திற்கு சென்ற அவர் நண்பருடன் அங்குள்ள பணியார கடையின் எதிரில் சாலையின் இடது புறத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே சென்ற இரு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக சாலையில் நின்றுக் கொண்டு இருந்த பிரான்சிஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட பிரான்சிஸ்ஸை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மூளைச் சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலங்கி தவித்த நிலையிலும் பிரான்சிஸ் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
இதனையடுத்து அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, பின்னர் மணப்பாறை அரசு மருத்துவமனை உடற்கூராய்வு செய்யப்பட்டு உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பிரான்சிஸ் உடலை எடுத்துச் சென்று உடையாப்பட்டி கல்லறை அருகே இறுதி சடங்குகளை மேற்கொண்டனர்.
இறுதி சடங்குகளுக்கு நேரில் சென்ற மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மரியமுத்து, மணப்பாறை காவல் ஆய்வாளர், வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
விபத்து ஏற்படுத்திய சவரிமுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.