தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ. 6 லட்சத்து 13 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் முருகன். இவர் குளத்தூர் ஈசிஆர் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் மது கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று டாஸ்மாக் கடையில் மது விற்பனையில் வந்த விற்பனை தொகை ரூ. 6 லட்சத்து 13 ஆயிரத்தினை கீழ வைப்பாரில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக தனது மோட்டார்பைக்கில் சென்றுள்ளார். அப்பகுதியில் உள்ள பனங்காட்டு பாதை வழியாக வங்கிக்கு சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் 3 பேர் முருகன் மோட்டார்பைக்கினை வழிமறித்துள்ளனர்.
தொடர்ந்து முருகனை மர்ம நபர்கள் தாக்கியது மட்டுமின்றி அவர் வைத்திருந்த ரூ. 6 லட்சத்து 13 ஆயிரத்தினை பறிமுதல் செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் லேசான காயம் அடைந்த முருகன் குளத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.சம்பவ இடத்தினை ஏடிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர் .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.