விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

விளாத்திகுளம் அருகே சூறைக்காற்றால் 700 க்கும் மேற்பட்ட வாழைகள் காற்றில் சாய்ந்து சேதமடைந்தது

Update: 2023-03-27 04:44 GMT

சூறைக்காற்றால் பாதிப்படைந்த வாழைகளை பார்வையிடும் விவசாயி.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூறைக்காற்றால் 700க்கும் மேற்பட்ட வாழைகள் சரிந்து விழுந்ததினால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இளமால்குளம் நொச்சிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி நடைபெற்று வருகிறது.

வாழைத்தார்கள் வெட்டி விற்பனை செய்யும் நிலையில் திடீரென ஏற்பட்ட சூறைக் காற்றால் சுமார் 700 க்கும் மேற்பட்ட வாழைகள் சரிந்து விழுந்தது. ஏற்கெனவே, செலவிற்கேற்ற வரவில்லாமல் வேதனையில் உள்ள விவசாயிகளுக்கு திடீர் சூறை காற்றால் வெட்டி விற்பனை செய்ய உள்ள நிலையில் குலை தள்ளிய தார்களுடன் சரிந்து விழுந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து இளமால் குலத்தை சேர்ந்த குணசேகரன் என்ற விவசாயி கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் விவசாயத்தைப் பொறுத்தவரை வேலையாட்களின் கூலி, உரங்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரவை விட செலவு அதிகமாக உள்ளது. இதனால் விவசாயத்தை விட்டு விட்டு பலர் செல்லும் நிலையில் விவசாயமே எங்கள் வாழ்வாதாரம் என கருதி அதனை செய்து வருகிறோம்.

எங்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படும் விதமாக சூறைக்காற்றால் வாழைகள் சரிந்து விழுந்து எங்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றார். 

Tags:    

Similar News