விளாத்திகுளம் எம்எல்ஏ அலுவலகம் அரசு கலைஞர் மருத்துவமனையாக மாற்றம் :- கனிமொழி எம்பி திறந்துவைத்தார்.

Update: 2021-06-07 11:50 GMT

விளாத்திகுளம் எம்எல்ஏ அலுவலகம் கொரோனா பரிசோதனைக்காக அரசு கலைஞர் மருத்துவமனையாக மாற்றம் :- கனிமொழி எம்பி திறந்துவைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்காக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அரசு கலைஞர் மருத்துவமனைகாக மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து, அங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துவக்கிவைத்தார்.

மேலும் 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உட்டசத்து பெட்டகம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில்:- விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் இப்பகுதி மக்களுக்கு கூடுதல் மருத்துவ வசதி கிடைக்க வேண்டுமென்பதற்காக தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அரசு மருத்துவமனைக்கு ஒப்படைத்து அரசு கலைஞர் மருத்துவமனையாக மாற்றியுள்ளார். இந்த மருத்துவமனை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் பணியில் இருப்பார்கள். சளி பரிசோதனை, கொரோனா தடுப்பூசி போடுதல், சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்படும். இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு கூடுதல் மருத்துவ வசதி கிடைக்கும் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இசைமேதை நல்லப்பசுவாமிகள் நினைவிடத்திடத்திற்கு கனிமொழி எம்பி சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விளாத்திகுளம் அம்பாள் பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளையொட்டி வேளாண்மை துறையின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு மரக்கன்று நடவு செய்து பணிகளை துவக்கிவைத்தார். மேலும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் விரிவாக்க பணிகள் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், சுகாதர பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.போஸ்கோராஜா மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 


Similar News