விளாத்திகுளம் அருகே நடுக்கடலில் படகை சரி செய்ய முயன்ற மீனவர் பலி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நடுக்கடலில் படகை சரி செய்ய முயன்ற மீனவர் மூழ்கி பலியானார்.;
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பார் கிராமத்தினை சேர்ந்த அந்தோணிசாமி என்பவரின் மகன் மெஸ்வந்த்(21).
இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று மாலை காற்றின் வேகம் அதிகரித்ததால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி உள்ளன.
இதனை சரி செய்ய நங்கூரம் அமைப்பதற்காக மெஸ்வந்த் கடலில் 50 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகினை சரி செய்வதற்காக கடற்கரையிலிருந்து நீந்தி சென்றுள்ளார்.
அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் நீந்த முடியாமல் கடலில் மூழ்கியுள்ளார். இதனை தொடர்ந்து சக மீனவர்கள் கடலில் இறங்கி மெஸ்வந்தை காப்பாற்ற முயற்சித்தனர்.
ஆனால் அதற்குள் மெஸ்வந்த் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மெஸ்வந்தின் உடலை மீட்டனர்.உடலைக் கைப்பற்றிய வேம்பார் கடலோர காவல் படை போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலில் தவறி விழுந்து பலியானது குறித்து வேம்பார் கடலோர காவல் படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்