மணப்பாடு : ரூ.34.63 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
மணப்பாடு ஊராட்சியில் ரூ.34.63 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகள் : அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்!
மணப்பாடு ஊராட்சியில் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.34.63 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் மணப்பாடு ஊராட்சி சபாபதிபுரம் தெருவில் ரூ.6.70 லட்சம் மதிப்பில் சிமிண்ட் சாலை அமைக்கும் பணிகள், மலைத்தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பில் நூலக கட்டிடம் கட்டும் பணிகள், வேதக்கோயில் பகுதியில் ரூ.12.80 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் ராஜாதெருவில் ரூ.5.13 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் ஆகிய ரூ.34.63 லட்சம் மதிப்பிலான பணிகளை மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் பல்வேறு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியின்படி தேர்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் இத்திட்டத்திற்கு என தனி துறை மற்றும் சிறப்பு அதிகாரியை நியமித்து தற்போது, அந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் அனைவரும் தொகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு சாலை வசதி, தெருவிளக்கு வசதி, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் என அனைத்து கோரிக்கை மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் பயன்பெறும் வகையில் டவுண் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கடலில் மீனவர்கள் மாயமானால் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உதவிகள் கிடைப்பதற்கு 7 ஆண்டுகள் ஆகும்.
தற்போது அவர்களுக்கு விரைவில் அரசு உதவிகள் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் இலவசமாக வழங்கினார்கள். தற்பொழுது 300 லிட்டராக இருக்கக்கூடிய மண்ணெண்ணெய்யை உயர்த்தி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நிவாரண தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என தெரிவித்தார்கள். தற்பொழுது ரு.4000 மற்றும் 16 வகையான மளிகை பொருட்களை வழங்கப்பட்டுள்ளது.
மணப்பாடு பகுதியில் ரூ.45 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இ சேவை மையம் மூலம் அரசு வேலைக்கு படிப்பதற்க பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுனாமியில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் மற்றும் பட்டா வழங்கப்படும். சிங்காரவேலனார் குடியிருப்பு திட்டத்தில் தமிழகம் முழுவதும் 2 லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்களின் நண்பராக, மீனவர்களின் நலனை காக்கின்ற அரசாக விளங்கி வருகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, வட்டாட்சியர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், பொற்செழியன், பங்குதந்தை லெரின் டிரோஸ், உடன்குடி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், முக்கிய பிரமுகர்கள் ஜாண்பாஸ்கர், எஸ்.ஜெ.ஜெகன், ராமஜெயம், மதன்ராஜ், மணப்பாடு பஞ்சாயத்து தலைவர் கிரேன்சிட்டா வினோ மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.