தூத்துக்குடி: மழலையர், ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் மழலையர், ஆதரவற்றோர் பெண் குழந்தைகள் இல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் இன்று (17.07.2021) ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது சமூக நல இயக்குநர் டி.ரத்னா, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் எஸ்.வளர்மதி, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு பாதிக்கப்பட்ட மகளிருக்கு ஆலோசனைகள் கூறும் பகுதிகளையும், தங்கும் பகுதிகளையும் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து அடைக்கலாபுரம் செயின்ட் ஜோசப் அறக்கட்டளையில் புனித சூசையப்பர் மழலையர் இல்லத்தில் உள்ள 1 வயதுக்கும் கீழ்பட்ட குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள அருளகம் மாற்றுத்திறனுடையோர் இல்லத்தையும், மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான இல்லத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதையும் பார்வையிட்டார்.
அங்குள்ள புனித சூசை அறநிலையத்தில் ஆதரவற்றோர் பெண் குழந்தைகள் உள்ள பகுதிக்கு சென்று அவர்களின் நலன் குறித்து விசாரித்தார். பின்னர் ஆறுமுகநேரியில் உள்ள லைட் சோசியல் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு முதியோர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்கு முதியோர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கட்டப்பட்டுள்ள அறையினை திறந்து வைத்தார்.
இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் கோட்டாட்சியர் கோகிலா, சமூக நலத்துணை துணை இயக்குநர் நந்திதா, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, முக்கிய பிரமுகர்கள் ஜெகன்பெரியசாமி, ஆனந்தசேகர், செயின்ட் ஜோசப் அறக்கட்டளை நிர்வாகி அருட்தந்தை பிரமில்டன் லோபோ, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின்ஜார்ஜ், திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன், லைட் முதியோர் இல்ல தலைவர் பிரேம்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.