திருப்பதியைப் போல திருச்செந்தூரிலும் வசதிகள்.. மாவட்ட ஆட்சியர் பேட்டி...

திருப்பதியைப் போல திருச்செந்தூரிலும் பக்தர்களுக்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Update: 2023-03-28 13:11 GMT

திருச்செந்தூரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்தசஷ்டி விழா, மாசித் திருவிழா ஆகியவை வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக தற்போது பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் பெருந்திட்ட வளாகப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் கார்த்திக், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் எச்.சி.எல். நிறுவனம் மூலம் ரூ. 200 கோடி மற்றும் கோயில் நிர்வாகத்தின் மூலம் ரூ.100 கோடி என மொத்தம் ரூ. 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகளை கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரிசனத்தை எளிமையாக்க பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் மூன்று நிலைகளாக நடைபெறுகிறது.

குடிநீர், நிர்வாக அலுவலகம், திருப்பதி தேவஸ்தானம் போன்று பக்தர்களுக்கு காத்திருப்பு அறைகள் வசதியுடன் வரிசையில் சென்று தரிசனம் செய்யும் வசதி, முடி காணிக்கை மண்டபம், பெரிய திருமண மண்டபங்கள், ஆன்மிக சொற்பொழிவு மண்டபங்கள் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது நிலையில் துணை மின் நிலையம், 65 ஏக்கர் பரப்பளவுள்ள கோயில் வளாகத்தில் மின்வயர்களை பூமிக்கடியில் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் நிலை பணிகள் 70 முதல் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை பணிகள் அனைத்தும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும்.

மேலும், திருக்கோயில் வளாகத்தில் 480 கழிப்பறைகள் கட்டப்பட உள்ளது. தற்போது 220 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அதேபோல், ஒரே நேரத்தில் 256 பேர் அமர்ந்து முடி காணிக்கை செலுத்தும் வகையில் பெரிய மண்டபமும், அங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக தலா 20 கழிப்பறைகள் வீதம் மொத்தம் 40 கழிப்பறைகள் கட்டப்பட உள்ளது. மேலும், காணிக்கை முடியை சேமித்து வைக்க வைப்பறையும் அமைக்கப்பட உள்ளது.

அன்னதான திட்டத்ததை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தினமும் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். திருவிழா காலங்களில் சுமார் 12000 பேர் அன்னதானத்தில் கலந்து கொள்கின்றனர். இதனால் ஒரே நேரத்தில் 600 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு மிகப்பெரிய அன்னதான மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

கோயில் வளாகத்தில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் உள்ள மரங்களை பாதுகாக்கும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டு உள்ளது. அன்னதான மண்டபம் அமைய உள்ள இடத்தில் உள்ள மரத்தினை சுற்றி இருபுறமும் மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் 104 கடைகளைக் கொண்ட வணிக வளாகம் அமைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் காத்திருப்பதற்கு நான்கு மண்டபங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 2400 பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த மண்டபங்களில் பக்தர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட உள்ளது.


மேலும், வாகனங்கள் நிறுத்துமிடமும் அமைக்கப்படுகிறது. தேர்கள் வலம் வருவதற்கும், வள்ளி குகைக்கு செல்வதற்கும் தனியாக பாதை அமைத்து பணிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். மறுசுழற்சிக்கு பயன்படுத்தியதுபோக தேவையில்லாத தண்ணீர் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் 2024 மே மாதம் முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மே மாதம் கோடை விடுமுறை என்பதால் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். எனவே அவர்கள் தங்குவதற்கு 20,000 சதுர அடி பரப்பில் 7 இடங்களில் தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட உள்ளது. அதுபோல் தற்காலிக கழிப்பறை வசதி, தற்காலிக முடி காணிக்கை செலுத்துமிடம், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடம், காலணிகள் பாதுகாக்கும் இடம் ஆகிய வசதிகள் செய்து தரப்படும்.

திருக்கோயிலுக்கு மூன்று இடங்களில் இருந்து குடிநீர் வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திருக்கோயில் நிர்வாகத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு மற்றும் குரங்கன்தட்டு பகுதியில் இருந்து நேரடி இணைப்பு ஆகிய மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே இடத்தில் சேமிக்கும் விதமாக 7.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும்.

பெருந்திட்ட வளாகப் பணிகளில் எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் 2.70 லட்சம் சதுர அடி பரப்பிலும், கோயில் நிர்வாகத்தின் மூலம் 1.80 லட்சம் சதுர அடி பரப்பிலும் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதில் தற்போது 1.40 லட்சம் சதுர அடி பரப்பில் நடைபெறும் கட்டுமான பணிகள் வருகிற டிசம்பர் மாதம் நிறைவு பெறும். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Tags:    

Similar News