கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு கிராம மக்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அறிவித்தபடி கிராம சபை கூட்டம் நடைபெறாததால், ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-05-02 08:52 GMT
கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு கிராம மக்கள் போராட்டம்

கண்கள் மற்றும் வாயில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

  • whatsapp icon

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள மேல திருச்செந்தூர் ஊராட்சி சார்பில் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நா. முத்தையாபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு ஊராட்சி துணைத் தலைவர் உட்பட நான்கு வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று இருந்தனர். ஆனால், கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் ஊராட்சித் தலைவர் வராததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து, கண்களில் மற்றும் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலர் மீது துணைத் தலைவர் முருகன் மற்றும் நான்கு வார்டு உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் திருச்செந்தூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

12 ஆண்டுகளாக நா. முத்தையாபுரத்தில் கிராம ஊராட்சி சபை நடத்தப்படவில்லை எனவும் இந்த ஆண்டு முத்தையாபுரத்தில் ஊராட்சி சபை கூட்டம் நடத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு ஊர் பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, முத்தையாபுரத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் எந்த அறிவிப்பும் இன்றி திடீரென வேறு இடத்திற்கு கிராம சபை கூட்டம் நடைபெறும் இடம் மாற்றபட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின்னரே, நா. முத்தையாபுரம் ஊர் பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் மாவட்டம் முழுவதும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News