திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்! பக்தர்கள் அதிர்ச்சி...!
சில மணி நேரங்களில் கடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. அமாவாசை பவுர்ணமி நாட்களில் இதுபோன்று கடல் உள்வாங்குதல் நிகழ்வு நடைபெறுகின்றது.
திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கியதால் அங்கு வந்திருந்த பக்தர்கள் திடீர் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரம் அங்கு பழக்கமானவர்கள் இது சாதாரண நிகழ்வு தான் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்தினர்.
தமிழகத்தில் இருக்கும் கடற்கரைகளில் அவ்வப்போது கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பவுர்ணமி நாட்களில் கடல் இப்படி உள்வாங்குவது அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான்.
இந்நிலையில் இன்று மதியம் கடல் திடீரென 200 அடி தூரத்துக்கு உள் வாங்கியது. இதனால் கடற்கரையில் கூடியிருந்த மக்கள் சற்று அதிர்ச்சியடைந்தனர். கடற்கரையில் இருக்கும் பாறைகள் வெளியில் தெரிந்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகள், கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதனை ஆச்சர்யமாக பார்த்து வியந்தனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். கடற்கரை தலமான இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். முக்கிய விசேசங்களின்போது லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்து செல்வார்கள். அப்படி இருக்கும் இந்த கோவிலில் முக்கியமான நிகழ்வாக மொட்டைப் போடுதலும், கடற்கரையில் குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. நாழிக் கிணற்றில் குளிப்பதற்கு முன் கடலில் முங்கு போடுகிறார்கள்.
அப்படி பக்தர்கள் முங்கு போட வரும்போது கடற்கரையைப் பார்த்தவர்களுக்கு சற்று ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி. கடல் திடீரென்று உள்வாங்கிவிட்டது. இதேபோன்று கன்னியாகுமரியிலும் கடல் உள்வாங்கியிருந்தது. இதனால் விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சில மணி நேரங்களில் கடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. அமாவாசை பவுர்ணமி நாட்களில் இதுபோன்று கடல் உள்வாங்குதல் நிகழ்வு நடைபெறுகின்றது.