திருச்செந்தூர் அருகே சீரான குடிநீர் வினியோகம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருச்செந்தூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல். போக்குவரத்து பாதிப்பு.

Update: 2021-12-20 14:45 GMT

திருச்செந்தூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் அருகே, குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிலோமிநகர் அடுத்த சுனாமி நகர் பகுதியில் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை, என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் திருச்செந்தூர்- அடைக்கலாபுரம் சாலையில் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 50 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். சாலைமறியல் குறித்து தகவலறிந்து வந்த திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ண ராஜா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் நாளை மாலைக்குள் குடிநீர் முறையாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் திருச்செந்தூர் - அடைக்கலாபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News