திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூதனப் போராட்டம்
திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அகில பாரத இந்து மகா சபா சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரிகள் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைகளில் இருந்து வருகிறது. இந்த வரி உயர்வுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும், உயர்த்தப்பட்ட வரிகள் மறு பரிசீலனை செய்யப்படவில்லை. வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் அரசு அறிவித்தபடி வீட்டு வரி, சொத்து வரி, உயர்த்தபடாமல் கூடுதலாக நான்கு மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த கூடுதல் வரி விதிப்பை கண்டித்து அகில பாரத இந்து மகா சபா மற்றும் பொதுமக்கள் சார்பில் நகராட்சி முன்பு கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களிடம் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து திருவோட்டை நகராட்சி முன்பு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் காரணமாக திருச்செந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நகராட்சி அலுவலத்தை முற்றுகையிட்ட அவர்கள் கண்டன கோஷங்களும் எழுப்பினர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டடோரை போலீஸார் கைது செய்தனர். வரிவிதிப்பை எதிர்த்து அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் கண்களை கட்டிக் கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்செந்தூர் நகரின் மையப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.