திருச்செந்தூர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்குள் புகுந்த கடமான்
திருச்செந்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் புகுந்த கடமானை மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில், வல்லநாடு, சாத்தான்குளம், உடன்குடி, நடுவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மான், கடமான் என அழைக்கப்படும் மிளா வகை மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் காணப்படுகிறது. சில நேரங்களில் இரை தேடியும், வழிதவறியும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துவிடுவது உண்டு.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் சுற்றுலா விருந்தினரின் மாளிகை வளாகத்தில் நள்ளிரவில் மான் இனத்தை சேர்ந்த கடமான்(மிளா) புகுந்தது. இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையில் திருநெல்வேலி வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி அந்த கடமானை பிடித்தனர். இதனையடுத்து வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் விடுவதற்காக கடமான் கொண்டு செல்லப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடன்குடியில் வணிக வளாகத்தில் கடமான் புகுந்தது. அதனை வனத்துறையினர் கயிறு கட்டி மீட்டனர். கழுத்து இருகி அந்த கடமான் உயிரிழந்தது. இந்த நிலையில் மீண்டும் இது மாதிரியான சம்பவம் நடைபெறாமல் இருக்க வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி இந்த கடமானை பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு, தேரிப்பகுதி மற்றும் உடன்குடி காட்டுப் பகுதியில் இந்த அரிய வகை கடமான் இருப்பதாக மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தெரிவித்தார்.