திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: அர்ஜூன் சம்பத் பேட்டி

திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

Update: 2023-05-02 08:42 GMT

திருச்செந்தூரில் அர்ஜூன் சம்பத் பேட்டியளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். லஞ்சம் மற்று ஊழல் ஒழிப்புக்கும், சாராய அரசுக்கு எதிராகவும் அவர் அரசியலுக்கு வரவேண்டும். உத்தரப்பிரதேசத்தில் ரேஷன் பொருட்கள் தாணியங்கி இயந்திரங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் தாணியங்கி இயந்திரத்தில் சாராயம் கிடைக்கிறது. இந்தியாவில் செப்டம்பர் 17 ஆம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி அன்று உழைக்கும் தொழிலாளர் தினமாக கொண்டாட வேண்டும். ரஷ்யா சீனா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகள் தனியாக தேசிய தொழிலாளர்கள் தினத்தை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இதனால் இந்திய கம்யூனிஸ்டுகள் மனம் திருந்த வேண்டும்.

திருச்செந்தூர் கோயில் திருப்பணிகள் ரூ. 300 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இது நிறைவு பெற 3 ஆண்டுகள் ஆகும். அதுவரை பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கோயில் வர்த்தகமாக மாறி வருகிறது. கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் 30 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் என நிதியமைச்சர் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை தானாகவே முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். இதற்கு யாரும் புகார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

மத்திய அரசு ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்காக 356 ஆவது பிரிவை பயன்படுத்தி திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

Tags:    

Similar News