திருச்செந்தூரில் தண்ணீர் இல்லாமல் கருகிய வெற்றிலை பயிர்கள்: விவசாயிகள் கவலை

betel nut crops were scorched -திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் திறந்து விடாததால் சுமார் 2000 ஏக்கர் வெற்றிலை பயிர்கள் கருகின.;

Update: 2023-08-06 06:49 GMT

கருகிய நிலையில் காட்சியளிக்கும் வெற்றிலை கொடிகள்.

தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலை பயிரிடுதல் பிரதான விவசாயமாக இருந்து வருகிறது. பெயர் பெற்ற இந்த ஆத்தூர் வெற்றிலை தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆத்தூர் வெற்றிலைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை கைக்கொடுக்காததால் பாபநாசம் அணையில் தற்போது 68 அடி நீர் உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் போதிய நீர் இல்லை. மேலும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் தென்கால் பாசனம் மூலம் இந்த ஆத்தூர் சுற்று வட்டார பகுதியில் வெற்றிலை விவசாயம் செய்யப்படுகிறது. பருவ மழை கை கொடுக்காததாலும் போதிய நீர் இல்லாததாலும், பயிரிடப்பட்ட வெற்றிலை நீரின்றி தவித்து வந்தது.

பயிரிடப்பட்ட வெற்றிலையை காப்பாற்ற ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 350 கன அடி நீர் தொடர்ந்து 15 நாட்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்கினால் வெற்றிலையை காப்பாற்றி விடலாம் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளோ அந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

இதனால் கடந்த சில தினங்கள் முன்பு ஆத்தூரில் விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். சாலை மறியல் போராட்டத்திற்கு வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை இதனால் மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான மேலாத்தூர், சுகந்தலை, வெள்ளக்கோவில், புண்ணை சாத்தான்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட சுமார் 2000 ஏக்கர் வெற்றிலை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிய நிலையில் காட்சியளிக்கின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், கருகும் அபாயத்தில் உள்ள மற்ற வெற்றிலை பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் ஏற்கெனவே கருகிய வெற்றிலை பயிர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News