ஆறு நாட்களுக்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூருக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ்கள், வேன்கள் கோவிலுக்கு பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.;

Update: 2023-12-24 16:15 GMT

பைல் படம்

கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதி பெய்த அதி கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நிவாரண பணிகள், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

தற்போது மழை வெள்ளம் வடிந்து வருவதால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.வெள்ள பாதிப்பில் இருந்து திருச்செந்தூர் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ்கள், வேன்கள், இருசக்கர வாகனங்களில் கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்கள் கடலில் புனித நீராடி கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.6 நாட்கள் கழித்து பக்தர்களின் கூட்டம் அலை மோதி காணப்பட்ட நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டன.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முருக கடவுள் தேவசேனாதிபதியாக வடிவெடுத்து, தீமையின் வடிவிலான சூர பத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலம். தமிழர்கள் இந்த நிகழ்வினை ஆண்டுதோறும் சம்ஹார திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். முருகப்பெருமான் பழந்தமிழ் இலக்கியங்களில் சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றார்.

சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலம் 2000-3000 ஆண்டுகள் முற்பட்ட தாகும். இத்திருத்தலம் முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் திருச்சீரலைவாய் என சான்றோர்களால் அழைக்கப்பட்டது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது ஸ்தலங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப் பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இத்தலத்தில் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருள்கின்றார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார்.

திருச்செந்தூர் முருகன் சந்நிதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மேற்கு கோபுரம் சுவாமிக்கு எதிரே, கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. கந்தசஷ்டி திருவிழா நடைபெறும் போதும், முருகன் திருக்கல்யாணத்தின்போதும் நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் மேல ராஜா கோபுர வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. ஆறு நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News