தூத்துக்குடி ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்ற மாவட்ட தலைவர் உயிரிழப்பு
தூத்துக்குடி ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்ற மாவட்ட தலைவர் உயிரிழந்த சம்பவம் அந்த அமைப்பினர் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பாக கருதப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் சார்பில், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் துவக்கப்பட்ட நாளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம். ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றம் வரை சென்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தடையை நீக்கினர்.
அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்கடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரணி நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் இருந்து ஸ்டேட் பேங்க் வரை பேரணி நடந்தது. இதில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் அமைப்பினர், பாஜகவினர் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பேரணியில் நடந்து சென்றபோது நாசரேத்தைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தலைவர் வெட்டும்பெருமாள் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெட்டும்பெருமாள் இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்ற இந்து முன்னணியின் மாவட்டத் தலைவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த அமைப்பினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.