தன்னை கடித்த கட்டுவிரியன் பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து வந்த பெண்ணால் பரபரப்பு!
தன்னை கடித்த கட்டுவிரியன் பாம்பை கையோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்த பெண்ணால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், கிராமப் பகுதிகளில் பாம்புகளை கண்டால் சிலர் பயம் ஏதுமின்றி ஒதுங்கி செல்வர். சிலர் விளையாட்டாக பாம்பை கையில் பிடிப்பதும் உண்டு. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் ஒருவர் தன்னை கடித்த பாம்பை கையோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அருகே உள்ள ஆத்திக்காடு கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அழகு ராணி (35) என்ற பெண் இன்று காலை அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அருகே உள்ள முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அவர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற வந்திருந்தார். அப்போது அவர் தான் கொண்டு வந்திருந்த ஒரு கேரி பேக்கில் தன்னை கடித்த பாம்பு இதுதான் எனக் கூறியவாறு மருத்துவமனை ஊழியர்கள் முன்பு பாம்பை காட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான மருத்துவமனை ஊழியர்கள், பாம்பு உயிருடன் இல்லை என்பதை அறிந்து பெருமூச்சு விட்டனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் சிலர் இது எந்த வகையான பாம்பு என்பது குறித்து விசாரணை நடத்தி, பின்னர் அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தப்பெண் அழகு ராணி என்பவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக மருத்துவமனை ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.