ஶ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஆயுதங்களை பார்வையிட்ட மாணவர்கள்

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் துப்பாக்கிகளையும், ஆயுதங்களையும் கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.

Update: 2023-08-08 14:47 GMT

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஆயுதங்களை கையாளுவது குறித்து மாணவர்களுக்கு  விளக்கம் அளித்த போலீஸ் அதிகாரி.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 5 ஆம் தேதி முறுக்கு கடை வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். பிளஸ் 1 வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் உட்பட 3 சிறுவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் உடன் படிக்கும் மாணவனின் தந்தை படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் பிரச்னைகளால் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்ற விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த காவல்துறையினர் முடிவெடுத்து உள்ளனர். இதற்காக முதற்கட்டமாக, ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து விழிப்புணர்வு கூட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கு கல்லூரி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு, காவல் நிலையங்களில் போலீசாரின் பணி என்ன என்பது குறித்தும், குற்ற சம்பவங்கள் நடைபெறும் போது போலீசார் அதனை தடுக்க எவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், கலவர சூழ்நிலைகளில் அதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகள் குறித்தும் அவை எந்த சூழ்நிலையில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம், துணைக்காவல் கண்காணிப்பாளர் மாயவன், ஆய்வாளர் அன்னராஜ், உதவி ஆய்வாளர்கள் ராஜா ராபர்ட், ரேணுகா ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

மேலும், படிக்கும் வயதில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், வழக்குகள் பதிவாவதால் வேலை வாய்ப்புகள் பெற முடியாத நிலை ஏற்படுவதும் வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் பெற முடியாத நிலை ஏற்படும் சூழ்நிலை குறித்தும் போலீசார் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

Tags:    

Similar News